திருச்சி மாநகரம் வடக்கு, தெற்கு என பிரிப்பு - காவல் துறையில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது : சரகத்துக்கு ஒரு உதவி ஆணையர் நியமனம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகர காவல்துறையை வடக்கு, தெற்கு என 2 ஆக பிரித்து சரகத்துக்கு ஒரு உதவி ஆணையரை நியமிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

திருச்சி மாநகர காவல்துறையில் மாநகர காவல் ஆணையரின் கீழ் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு என 2 துணை ஆணையர்கள் பணியிடங்கள் இருந்தன.

இதேபோல கன்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை, ரங்கம் ஆகிய 4 சரகங்களில் சட்டம், ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கென தனித்தனி உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் பதவி நிலை ஒரே அளவாக இருந்தபோதிலும் சட்டம், ஒழுங்கில் பணிபுரிவது உயர்வாகவும், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவில் பணிபுரிவது அதற்கடுத்த நிலையிலும் இருப்பதாகவும் காவல் அதிகாரிகளிடையே நீண்ட நாட்களாக குமுறல் இருந்து வந்தது. இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சரகத்திலுள்ள காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து நிர்வாக பணிகளை எளிதில் மேற்கொள்ளவும், தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாநகரங்களில் நிர்வாக எல்லைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் இருந்த 2 துணை ஆணையர்களுக்கான நிர்வாக எல்லைகள் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு என்பதற்கு பதிலாக துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல குற்றப்பிரிவு உதவி ஆணையர் பணியிடங்கள் முற்றிலும் கலைக்கப்பட்டு, காவல் நிலையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருச்சி தெற்கு மற்றும் திருச்சி வடக்கில் தலா 3 சரகங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த சரகங்களுக்கான உதவி ஆணையர்களை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி வடக்கு கட்டுப்பாட்டிலுள்ள தில்லைநகர் சரக உதவி ஆணையராக கே.ராஜூ, காந்தி மார்க்கெட் சரகத்துக்கு டி.சுந்தரமூர்த்தி, ரங்கம் சரகத்துக்கு கே.சுப்பிரமணியன் ஆகியோரும், திருச்சி தெற்கு கட்டுப்பாட்டிலுள்ள கே.கே.நகர் சரகத்துக்கு எல்.பாஸ்கர், கன்டோன்மென்ட் சரகத்துக்கு அஜய் தங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி வடக்கு துணை ஆணையராக சக்திவேல், தெற்கு துணை ஆணையராக முத்தரசு ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாகவும், பொன்மலை சரகத்துக்கு உதவி ஆணையர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘திருச்சி மாநகர காவல்துறையை வடக்கு, தெற்கு என 2-ஆக பிரித்து நிர்வகிக்கும் திட்டம் அக்.20 (நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சில சரகங்களுக்கு உதவி ஆணையர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். துணை ஆணையர் மற்றும் சில உதவி ஆணையர்கள் நியமனத்துக்கான அரசாணையை எதிர்நோக்கியுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்