மதுரையில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் - வைகை ஆற்றுக்குள் கால்வாய் வெட்டி கழிவு நீர் வெளியேற்றம் : வழக்கம் போல கண்டுகொள்ளாத அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

மதுரை வைகை ஆற்றில் சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் இறங்கும் இடத்தில் கால்வாய் வெட்டி அப்பட்டமாகவே கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் பெரிய அணைகள், நீர் ஆதாரங்கள் இல்லாததால் இம்மாவட்ட மக்கள் குடிநீருக்கும், பாசனத்துக்கும் வைகை அணையை மட்டுமே நம்பி உள்ளனர். கடந்த காலங்களில் வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் மழை பெய்தாலும் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதில்லை.

மாநகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், இந்த மழை நீர் வைகை ஆற்றுக்கு பெரியளவில் வரவில்லை. வைகை ஆறு நிரந்தரமாகவே வறட்சிக்கு இலக்காகிவிட்டது. வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க, மதுரை மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டம் இன்னும் முடிவடையாததால் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை.

மேலும், ஊராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாததால் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களின் கழிவுநீர் வைகை ஆற்றுக்குள்ளேயே கால்வாய்கள் மூலம் விடப்படுகிறது.

இந்நிலையில் பந்தல்குடி கால்வாயிலிருந்து பெருக்கெடுத்து வரும் கழிவு நீர் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் கலக்கிறது. இதற்காக பந்தல்குடி கால்வாயில் இருந்து வைகை ஆற்றுக்குள் கால்வாய் வெட்டி அப்பட்டமாகவே கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசடைந்து அப்பகுதி வணிக நிறுவனங்கள், ஏவி மேம்பாலம், கோரிப்பாளையம் வரை தூர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் வெட்டி வைகை ஆற்றுக்குள் கழிவுநீர் கலக்கவிடுவதை மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்