நவம்பர் 1-ம் தேதிக்கு முன்னர் பள்ளிகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார்.கூட்டத்தில், பள்ளி வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும். நாள்தோறும் பள்ளி தொடங்கும் முன்னரும், பின்னரும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மருத்துவக் குழுக்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்து பள்ளிகளிலும் வைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்களை உடனுக்குடன் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி திறக்கும் முன்னர் தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தனியார் பள்ளி வாகனங்களும் தணிக்கை செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளை தினசரி ஆய்வு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர் வெ.ஆலின் சுனேஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ரா.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago