மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் குறைந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து தாமிரபரணியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி குறுக்குத்துறையில் முருகன் கோயில் மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பகலில் மழை பெய்யவில்லை. இதனால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று காலையில் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 137.8 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,851 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 147.30 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. அணைக்கு 599 கனஅடி தண்ணீர் வந்தது.
அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து தாமிரபரணியில் வெள்ளம் நேற்று குறையத் தொடங்கியது. குறுக்குத்துறை கோயில் மண்டபங்கள் வெளியே தெரிந்தன. வெள்ளம் குறைந்ததை அடுத்து தாமிரபரணியில் படித்துறைகளில் ஏராளமானோர் குளித்தனர்.
களக்காடு தலையணையில் கடந்த 16-ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் திருக்குறுங்குடி மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது.
156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 147.30 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago