வாணியம்பாடி அருகே அரசு அங்கீகாரமின்றி 800 மாணவர்களுடன் செயல்படும் - தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு :

வாணியம்பாடி அருகே அரசு அங்கீகாரமின்றி சுமார் 800 மாணவர் களுடன் செயல்படும் தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.சம்பத் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் ஆயர்பாடி கணவாய்புதூரில் வேல் கல்வி அறக்கட்டளை சார்பில், வேல் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் பள்ளி அரசின் முறையான அங்கீ காரமின்றி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கீகாரம் பெறாததை இப்பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தெரிவிக்காமல் மறைத்து வருவாய் ஈட்டும் நோக்கில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன. இதனால். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மலைப்பகுதியில் இயங்கி வரும் இப்பள்ளிக்கு முறையான சாலை வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் என எந்தவொரு அடிப் படை வசதியும் இல்லை. 450 மாணவி கள் படிக்கும் இப்பள்ளி குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் மலைப்பகுதியில் உள்ளதால் சமூக விரோத கும்பல்களால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அரசின் அங்கீகாரமின்றி இப்பள்ளி இயங்கி வருவது குறித்து கடந்த ஜூன் மாதம் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அப்பள்ளியில் பயிலும் மாணவர் களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, மனுதாரரின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மேலும் அந்த பள்ளியில் பயிலும் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றுமாறு பெற் றோரையும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக சட்டத்துக் குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்பது குறித்து மனுதாரருக்கு 10 வாரங்களில் தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE