வெம்பாக்கம் அருகே பழக்கடை தகராறில் கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவரை விடுவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த செல்லப்பெரும்புலிமேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர். இவர், மாங்கால் கூட்டுச்சாலையில் உள்ள பழக்கடையில் கடந்த மாதம் 24-ம் தேதி பழம் வாங்கியபோது, பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், கடையின் உரிமை யாளர் மணிகண்டனை கத்தி யால் வெட்ட முயன்றதாக, தூசி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் செய்யாறு–காஞ்சிபுரம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும், அவர் மீதான வழக்கை ரத்து செய்து விடு தலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், சேகர் மீது உள்ள குற்ற வழக்குகள் குறித்து எடுத்துரைத்து, அவரை விடுவிப்பதும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஆட்சியரின் முடிவாகும். எனவே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை அணுகு மாறு அறிவுறுத்தி, சமாதானம் செய்தனர்.
இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், செய்யாறு – காஞ்சிபுரம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago