அரியலூர்திருக்கை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே அரியலூர்திருக்கை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிகலா ரவி மற்றும் அவரது தரப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் எதிரே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது சசிகலா ரவி கூறுகையில், "ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நான் 980 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட வனிதா 993 வாக்குகள் பெற்றதாகவும், வசந்தா 797 வாக்குகள் பெற்றதாகவும், செல்லாத வாக்குகள் 91 எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். வாக்கு எண்ணும்போது எனக்கு பதிவான 15 வாக்குகளை மற்ற வேட்பாளரின் கணக்கில் வைத்தனர். இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் 13 வாக்குகள் வித்தியாசம் வருவதாகவும், அனைத்து வாக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார்.
ஆனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் வனிதா 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்து விட்டனர். வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வந்தார். எனவே அரியலூர் திருக்கை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதையடுத்து டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago