கொல்லிமலை அவுரிக்காடு கிராமத்தில் தொடக்கப் பள்ளி தொடங்கக் கோரிக்கை :

புதிய தொடக்கப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கொல்லிமலை தாலுகா சித்தூர் நாடு கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் சித்தூர் நாடு ஊராட்சி நரியன்காட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு 11 கிராமங்களில் இருந்து காட்டுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மழை போன்ற இயற்கை சீற்ற காலங்களில் மாணவர்கள் பள்ளி செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. தற்போது நடுநிலைப் பள்ளி அமைந்துள்ள நரியன்காட்டிலிருந்து எக்கம்பாளி கிராமம் 4 கி.மீ, தூரத்திலும், பட்டங்கிராய் கிராமம் 2 கி.மீ தூரத்திலும், வாழக்காட்டுப்புதூர் கிராமம் 2.5 கி.மீ., தூரத்திலும், அவுரிக்காடு கிராமம் 1.5 கி.மீ தூரத்திலும், பேக்காட்டுப்புதூர் கிராமம் 3.5 கி.மீ தூரத்திலும் உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கி அங்குள்ள மாணவர்களின் நலன் கருதி அவுரிக்காடு கிராமத்தினை மையமாகக் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி படிக்க புதிய தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE