மக்கள் சபை நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியிடம் வீடு கேட்ட ஆதரவற்ற பெண்ணுக்கு 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மற்றும் 11 பேரூராட்சி களில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில், பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நடந்த மக்கள் சபை நிகழ்வில் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த செல்வி என்பவர், 3 மகள் களுடன் ஆதரவற்ற நிலையில் வசித்து வருவதாகவும், அதில் ஒரு மகள் கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி என்றும், தங்களுக்கு வசிப்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் அந்தப் பெண்ணுக்கு காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். இதையடுத்து, மனு அளித்த 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவிப்பதாக செல்வி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றி போரில் வீரமரணமடைந்த கிருஷ்ணராய புரத்தைச் சேர்ந்த ஹவில்தார் ராஜேந்திரனின் மனைவி ரா.தமிழ்ச் செல்வி மற்றும் கடவூரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி மூ.தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago