தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வீரகேரளம்புதூர் வட்டம், அச்சங்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘அச்சங்குட்டத்தில் உள்ள அரசுநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் கட்ட முயற்சித்தனர்.அதை, காவல்துறை உதவியுடன்தடுத்து நிறுத்தினோம். ஊருக்கு பொதுவான அந்த இடத்தில் ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து அளித்துள்ள மனுவில், ‘தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உரிய அனுமதியின்றி பள்ளிவாசல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
புளியங்குடி, டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள மனுவில், ‘கமிட்டி தொடர்பாக எங்கள் ஊரில் இரு தரப்பினராக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் எங்கள் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பால விநாயகர் கோயிலில் மாரியம்மன் பீடம்வைத்து வழிபட முடிவு செய்து,அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். பீடம் அமைக்க வைத்திருந்தகட்டுமானப் பொருட்களை எதிர்தரப்பினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வழிபாட்டு உரிமையை பெற்றுத்தர வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் அளித்துள்ள மனுவில், ‘கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, கற்குடி, மோட்டை, தவணை, பகவதியாபுரம், தெற்குமேடு, கட்டளைகுடியிருப்பு, பண்பொழி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிற்கள் சேதமடைந்தன. தென்காசி வட்டாரத்துக்கு உட்பட்ட குற்றாலம், கொட்டாகுளம், பாட்டப்பத்து பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-18 ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகள் பலருக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago