திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 2,115 பேர் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி முதற்கட்டமாகவும், 9-ம் தேதி 2-ம் கட்டமாக 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட் டத்தில் மொத்தம் 2,125 பதவிகளுக்கு 6,300-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி மாலை வரை நடைபெற்று முடிவுகள் இரவு வரை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாளை 20-ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகளில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அது போக 205 பேர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நாளை காலை பதவியேற்க உள்ளனர். அவர்களை தொடர்ந்து அந்தந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்க உள்ளனர்.
மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் போட்டியிடவில்லை. இது போக 208 ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 1,770 பேர் நாளை காலை பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம ஊராட்சிச்செயலாளர்கள் செய்து வருகின்றனர்.
அதேபோல, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி, மாதனூர் மற்றும் ஆலங் காயம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நாயக்கநேரி ஊராட்சியை தவிர்த்து 124 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த ஒன்றிய அலுவல கங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு பதவி யேற்க உள்ளனர். அதேபோல, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட ஊராட்சி அலுவலகம் திருப்பத்தூர் மாவட் டத்தில் இல்லாததால், 13 மாவட்ட கவுன்சிலர்களும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கும், ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் காலையிலும், துணைத்தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் போட்டியின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் பதவியேற்ற உறுப்பினர்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 2,115 நபர்களும் நாளை காலை பதவியேற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை துரிதப் படுத்தவும், பதவியேற்பு நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழாவும், மறைமுக தேர்தலை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என உள்ளாட்சி அமைப் பினர்களுக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago