கோவை-சோமனூர் வழித்தடத்தில் பெரும்பாலும் சொகுசுப் பேருந்துகளே இயக்கம் : இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் குற்றச்சாட்டு

கோவை உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் சொகுசுப் பேருந்துகளே இயக்கப்படுவதால், இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார். அதன்படி, சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகள் தவிர, மற்ற நகர பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். இந்நிலையில், உக்கடம்-சோமனூர், காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில், பெரும்பாலும் சொகுசுப் பேருந்துகளே இயக்கப்படுவதாக, பெண் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறும்போது, “உக்கடத்திலிருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளே இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் இரு சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்திபுரத்தில் இருந்தும் சொகுசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. இதனால் இலவச பயண சலுகையை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே, இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “உக்கடம்-சோமனூர், காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலம்பூர் வரை இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழித்தடத்தில் செல்வோர், நகரப் பேருந்துகள் தவிர, புறநகர் பேருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்