பொள்ளாச்சியில் சொந்த கட்டிட வசதியின்றி - இடப் பற்றாக்குறையுடன் செயல்படும் நூலகம் :

பொள்ளாச்சி நூலகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், இடவசதியின்றி போட்டி தேர்வுக்கு நூலகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உறுதுணையாக கடந்த 60 ஆண்டுகளாக மரப்பேட்டை பகுதியில் உள்ள கிளை நூலகம் இருந்து வந்தது.

இந்த நூலகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து அங்கு வரும் மாணவர்களுக்கும், புத்தகங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவானதால் இந்த நூலகம், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் துறை கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்க போதிய வசதி இல்லை. இருக்கை வசதியும் இல்லாததால் புத்தகங்களை சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து, தன்னார்வலர் விஜயகுமார் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் போட்டி தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர மரப்பேட்டை பகுதி கிளை நூலகம் உறுதுணையாக இருந்தது. இந்த நூலகத்தில் முன்பு 10-க்கும் மேற்பட்ட கணினிகளுடன் செயல்பட்டுவந்த டிஜிட்டல் நூலகம் தற்போது புதிய கட்டிடத்தில் இடவசதியின்றி செயல்படாமல் உள்ளது. இதனால், வாசகர்கள் டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புத்தகங்கள் சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலர் போட்டி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதிய நூலக கட்டிடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் கூறும்போது, “நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தற்போது போதுமான நிதியில்லை. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வின் தொகுதி வளர்ச்சி திட்டத்தில் நிதி கிடைத்தால் புதிய நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்