விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் - 19,724 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு : கோவை மண்டல மின்வாரியம் இலக்கு

By க.சக்திவேல்

கோவை மண்டலத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் 19,724 விவசாயிகளுக்கு புதிதாக மின்இணைப்பு வழங்க மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் சாதாரண பிரிவில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தமுறையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 25 ஆயிரம் இணைப்புகளும், 2020-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன. இவர்களைத் தவிர, கடந்த 2003 முதல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின்போது, புதிதாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கோவை மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் தொடங்கிவைத்தார். இத்திட்டம் ரூ.3,025 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. சாதாரணபிரிவில் 2006 மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும். சுயநிதி திட்டத்தில் (ரூ.10 ஆயிரம் கட்டணம்) 2007 மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்து, தற்போது விருப்ப கடிதம் அளித்து ரூ.500 செலுத்துபவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். சுயநிதி திட்டங்களில் (ரூ.25 ஆயிரம் கட்டணம், ரூ.50 ஆயிரம் கட்டணம்) 2012 மார்ச் 31 வரை ஏற்கெனவே ரூ.500 செலுத்தி விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். அதன்படி, கோவை தெற்கு, வடக்கு, மாநகரம், திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, நீலகிரி என கோவை மண்டலத்தில், 4 பிரிவுகளில் மொத்தம் 19,724 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்