தொடர்மழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு :

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர் மழைகாரணமாக நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): சின்னகல்லாறு 92, சோலையாறு 78, வால்பாறை பிஏபி 72, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 69, சின்கோனா 62, கோவை தெற்கு 42, விமானநிலையம் 39.2, வேளாண் பல்கலைக்கழகம் 39.2, சூலூர் 33, ஆழியாறு 26, பெரியநாயக்கன்பாளையம் 25, பொள்ளாச்சி 20.

பெண்ணை தேடும் பணி தீவிரம்

கோவை மத்திபாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மருதன் மனைவி விஜயா (55). தோட்ட வேலைக்கு சென்ற விஜயா, சக பெண் தொழிலாளர்களுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஓடையை 4 பேரும் கடக்க முயன்றனர். இதில் விஜயா தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த மற்ற மூவரும் கரையில் நின்று சத்தம் போட்டுள்ளனர். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து, தேடிப் பார்த்தும் விஜயாவைக் காணவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணி வரை தேடியும் விஜயாவை கண்டுபிடிக்க இயலவில்லை. வெளிச்சம் இன்மையால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை 6 மணி முதல், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூர் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்