சத்தியமங்கலம் அரசு விதைப்பண்ணையில் - பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவை நடவு தொடக்கம் :

சத்தியமங்கலத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பாரம்பரிய நெல் ரகம் நடவு தொடங்கியுள்ளது. பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவை நடவினை தொடங்கி வைத்த பின்னர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சின்னச்சாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு சான்று விதைகள் உற்பத்தி செய்து வழங்கிட சத்தியமங்கலம், பவானி மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்று இடங்களில் அரசு விதைப்பண்ணைகள் உள்ளன. சத்தியமங்கலம் மாநில அரசு விதைப்பண்ணையில், 33 ஏக்கர் பரப்பில் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நெல் ரகங்கள் ஏ.எஸ்.டி 16, டி.பி.எஸ் 5, கோ 50, கோ 51 ஆகியவை 17 ஏக்கர் பரப்பிலும், வீரிய மக்காச்சோளம் கோ.எச்.எம் 8 ரகம் 2 ஏக்கர் பரப்பிலும், உளுந்து வி.பி.என் 8 ரகம் 8 ஏக்கர் பரப்பிலும் மற்றும் தட்டைப் பயறு கோ.சி.பி 7 ரகம் 3 ஏக்கர் பரப்பிலும் பயிரிடப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை முறையில், மருத்துவ குணங்கள் மிகுந்த உடலுக்கு ஆரோக்கியம் பெருக்கும் பாரம்பரிய நெல் ரக விதைகளை அரசு விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவை 3 ஏக்கர் பரப்பில் நடவு தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் மெ.டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செம்மை நெல் சாகுபடி எனும் ஒற்றை நாற்று நடவு முறையில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி இலக்கினை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்