விவசாயிகளுக்கு ஆவின் ரூ.500 கோடி பாக்கி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு :

ஈரோடு: ஆவின் நிர்வாகம் கொடுக்க வேண்டிய பாலுக்கான நிலுவைத்தொகை ரூ.500 கோடியை வழங்க வலியுறுத்தி 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் காணொலிக் காட்சி மூலம், மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் முகம்மது அலி, பொருளாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் நாள்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஆவின் பால் விற்பனை விலையை அரசு லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு தினமும் ரூ.ஒரு கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை அரசு மானியமாக அவ்வப்போது வழங்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் பால் வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக இத்தொகையை வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25-ம் தேதியன்று அனைத்து ஆவின் முன்பும், அரசு அலுவலகம் முன்பும் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்