ஈரோட்டில் தீபாவளிக்கான ஜவுளி விற்பனை தொடங்கியுள்ளதால் ஜவுளிச்சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஜவுளி உற்பத்தி நகரான ஈரோட்டில், ஜவுளி ரகங்களின் விலை குறைவாக இருக்கும் என்பதால், முக்கிய விழா காலங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து கொள்முதல் செய்வது வழக்கம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நிறைவைத் தொடர்ந்து, ஈரோடு கனி ஜவுளிச்சந்தை மற்றும் மணிக்கூண்டு , ஆர்.கே. வி.ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி போன்ற பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. கரோனா ஊரடங்கால் களையிழந்து காணப்பட்ட கனி ஜவுளிச்சந்தையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஜவுளி விற்பனை களை கட்டியது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு ஜவுளிச்சந்தையில் திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன், ஜட்டிகள், ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கி, சட்டைகள், ரெடிமேட் துணிகள், துண்டுகள், சுடிதார், போர்வை ஆகியவற்றின் விற்பனை பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும். மேலும், சூரத், புனே, மும்பை, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சேலை ரகங்களும் இங்கு விற்பனையாகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து கொள்முதல் செய்து செல்வார்கள். பண்டிகை காலங்களில், நாள்தோறும் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கும். இந்த ஆண்டு தாமதமாக தற்போதுதான் விற்பனை தொடங்கியுள்ளது. நூல் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து ஜவுளிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது, தொழில் நிறுவனங்களில் இன்னும் போனஸ் முழுமையாக வழங்காததும்தான் தீபாவளி விற்பனை தாமதத்துக்கு காரணம், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago