ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் ரூ.10 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் சேலம் மாவட்டத்தின் குற்றாலம் என அழைக்கப்படுகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு இயற்கை சூழலில் குளித்து மகிழும் அருவி, ஏரியில் படகு சவாரி, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, மலைமுகடுகள் உள்ளிட்டவைகள் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இங்கு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அருவியில் பயணிகள் குளிக்கும் இடத்தில் உள்ள கம்பித் தடுப்புகளை புதுப்பித்தல், அருவி நீர் வெளியேறும் பாதை சீரமைப்பு, ஆடை மாற்றும் அறைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முட்டல் ஏரியில் படகு சவாரிக்காக இரு மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு ஏற்கெனவே இருந்த மேலும் இரு மோட்டார் படகுகளை சீரமைத்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை மகிழ்விக்க விலங்கு உருவ வடிவில் பிரம்மாண்ட இருக்கைகள் உள்ளிட்ட பல விரிவாக்கப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
முட்டல் ஏரியை ஒட்டியுள்ள பூங்காவை விரிவுபடுத்த கூடுதலாக 1 ஏக்கர் நிலத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் புதிதாக நிறுவப்பட உள்ளன. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள விளையாட்டுச் சாதனங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன. பூங்காவில் செயற்கை நீரூற்று, உணவருந்தும் கூடம், மயில், ஒட்டகச் சிவிங்கி, மான் உள்ளிட்ட விலங்குகளின் உருவ வடிவிலான 10 இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், ஏரி நீர்பரப்பின் மீது பயணிகள் பறந்து செல்வது போல உணர்வை ஏற்படுத்தும் ‘ஜிப்லைன்’ சவாரி, சாகச துடுப்புப் படகுகளான ‘கயாக்கிங்’ போன்ற படகு சவாரி உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், ஆனைவாரியை கழுகுப் பார்வையில் பார்க்கும் வகையில் பார்வையாளர் கோபுரமும் அமைக்கப்படவுள்ளன. மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்களை கொண்ட சிறு அருங்காட்சியகம், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் உணவுகள் கொண்ட உணவகம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன. சுமார் ரூ.10 லட்சம் செலவில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago