சேலம், ஈரோடு மாவட்டங்களில் தொடர் மழை : மேட்டூரில் 92, தாளவாடியில் 41.6 மி.மீ மழை பதிவு

சேலம், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூரில் 92.2 மிமீ மழை பதிவானது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மதியத்துக்கு மேல் சேலம், மேட்டூர், ஆத்தூர் வட்டாரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 92.2 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

பெத்தநாயக்கன்பாளையம் 45, ஏற்காடு 39.6, கெங்கவல்லி 25, சேலம் 24.7, ஆத்தூர் 22.4, ஆனைமடுவு 17, வீரகனூர் 7, ஓமலூர் 6, எடப்பாடி 4.6, கரியகோவில் 2 மிமீ மழை பதிவாது.

மாவட்டத்தில் நேற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. தொடர் மழை காரணமாக கிராமப் பகுதிகளில் வயல்களில் உழவுப் பணி, உரமிடுதல், பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல், உள்ளிட்ட வேளாண் பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் காற்றுடன் மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதியம் வரை வெயிலும், அதனைத் தொடர்ந்து மாலை மற்றும் இரவில் மழையும் தொடர்ந்து வருகிறது. ஈரோடு நகரப்பகுதியில் நேற்று முன் தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் காரணமாக பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாக மாறின. நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன் தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தாளவாடி பகுதியில் 41.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ஈரோட்டில் பதிவான மழையளவு (மி.மீ)

தாளவாடி 41.6, சென்னிமலை 41, அம்மாபேட்டை 26, நம்பியூர் 25, பவானி 21, ஈரோடு 16, பெருந்துறை 14, கொடிவேரி 13, வரட்டுப்பள்ளம் 11, மொடக்குறிச்சி 9, கவுந்தப்பாடி 9, பவானிசாகர் 8.2, குண்டேரிப்பள்ளம் 4.6, கோபி, சத்தியமங்கலம் - 4.

பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 5512 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக 3200 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்