தமிழக அரசே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வை மேற்கொள்ள வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் விரிவான அகழாய்வு பணியை தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ள புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டையில் சங்ககாலத்தைச் சேர்ந்த கோட்டை, கொத்தளம் உள்ளது. இங்கு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 2 மாதம் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு கழிவுகள், அணிகலன்கள் சேகரிக்கப்பட்டன.

இதுதவிர, மேலாய்வின் மூலம் பழங்கால கூரை ஓடுகள், ஆம்போரா குடுவையை ஒத்த அடிப்பாகம், இரும்புப் பொருட்கள், மணிகள், குவார்சைட் ஆபரணங்களின் மணிகள் உள்ளிட்டவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

இந்நிலையில், மாநில தொழில்துறை அமைச்சர் மற்றும் தொல்லில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேற்று முன்தினம் விருதுநகரில் சந்தித்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், பொருளாளர் எம்.ராஜாங்கம், துணைத் தலைவர் கஸ்தூரிரங்கன், இணைச் செயலாளர் மு.முத்துக்குமார், நிர்வாகி ரகமத்துல்லா ஆகியோர் பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு விரிவான அகழாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்