திருமானூர் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 38 பெண்கள் காயம் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 45 பெண்கள் சன்னாவூர் பகுதியில் விவசாய கூலி வேலைக்காக ஒரு சுமை ஆட்டோவில் நேற்று சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை அதே சுமை ஆட்டோவில் 45 பேரும் திரும்ப வந்துள்ளனர். சன்னாவூரிலிருந்து சற்று தொலைவு வந்த சுமை ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மலர்கொடி(50), புஷ்பம்(60), பேச்சாயி(61), சித்ரா(28), பாப்பாத்தி(40), பெரியாச்சி(48) உட்பட 38 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 21 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு விபத்தில் 8 பேர் காயம்: அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் துக்க நிகழ்வில் பங்கேற்க சுமை ஆட்டோ ஒன்றில் அயன் ஆத்தூருக்கு நேற்று சென்றுகொண்டிருந்தனர். கீழப்பழுவூரை அடுத்த கருப்பூர் பிரிவு பாதை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சுமை ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் க.மேட்டுத்தெரு மனோகரன்(50) மற்றும் செம்மையன்(50), மஞ்சுளா(45), மதிவாணன்(59) உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்