நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை : பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்வு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 275 மி.மீ. மழை பதிவானது.

சேர்வலாறில் 144 மி.மீ., மணிமுத்தாறில் 102.80, கொடுமுடியாறு அணையில் 100, அம்பாசமுத்திரத்தில் 75, சேரன் மகாதேவியில் 18.20, நாங்குநேரி, பாளையங்கோட்டையில் தலா 18, திருநெல்வேலியில் 16.60, ராதாபுரத்தில் 10.40 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 20,862 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,915 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஒரே நாளில் 23 அடி உயர்வு

143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து 131.30 அடியாக இருந்தது. சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 2,512 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 2,659 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 156 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 22 அடி உயர்ந்து 147.90 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு 5,059 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 74.50 அடியாக இருந்தது.

52.25 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பியது.

பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 50 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் 639 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.36 அடியாகவும் இருந்தது.

தென்காசி

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. அடவிநயினார் அணையில் 95 மி.மீ., கடனாநதி அணையில் 70, குண்டாறு அணையில் 64, ஆய்க்குடியில் 61, தென்காசியில் 59, செங்கோட்டையில் 51, ராமநதி அணையில் 50, கருப்பாநதி அணையில் 32, சிவகிரியில் 26, சங்கரன்கோவிலில் 22.50 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணைக்கு விநாடி க்கு 1,630 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 79.80 அடியை எட்டியது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 415 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது.

கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர் வந்தது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 61.03 அடியாக இருந்தது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. குண்டாறு அணைக்கு வரும் 135 கனஅடி நீர், அடவிநயினார் அணைக்கு வரும் 240 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

பலத்த மழையால் திருநெல் வேலி, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பரவலாக மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.

அப்பர் கோதையாறில் 363 மி.மீ., மழை

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 152 மி.மீ., பேச்சிப்பாறையில் 216, சிற்றாறு ஒன்றில் 204, பெருஞ்சாணியில் 113 மி.மீ., மழை பெய்திருந்தது. கோதையாறு பகுதியில் 1992-ம் ஆண்டுக்கு பின்னர் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. அப்பர் கோதையா றில் 363 மி.மீ., லோயர் கோதையாறில் 266 மிமீ., மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதற்கு இது காரணமாக அமைந்தது. பிற இடங்களில் மழை அளவு: கன்னிமாரில் 80 மிமீ., பூதப்பாண்டியில் 50, களியலில் 47, கொட்டாரத்தில் 55, மயிலாடியில் 75, நாகர்கோவிலில் 55, புத்தன்அணையில் 110, சிவலோகத்தில் 194, சுருளகோட்டில் 102, குளச்சலில் 34, இரணியலில் 35, மாம்பழத்துறையாறில் 53, கோழிப்போர்விளையில் 57, அடையாமடையில் 81, குருந்தன்கோட்டில் 50, முக்கடல் அணையில் 45 மி.மீ., மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 45.71 அடியாகவும், பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 75.85 அடியாகவும், சிற்றாறு ஒன்று அணையில் நீர்மட்டம் 16.24 அடியாகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,196 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு இரண்டு அணையின் நீர்மட்டம் 16.33 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 670 கனஅடி தண்ணீர் வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்