வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த வேலூரைச் சேர்ந்த மாலதி கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வந்தார்.
காட்பாடி - லத்தேரி சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ் வழியாக வந்த லாரி மோதியதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், மாலதியுடன் கடந்த 1997-ம் ஆண்டு 2-வது பேட்ஜில் காவலர் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 2,500-க்கும் மேற் பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து ‘காக்கும் காவலர்கள்’ என்ற குழுவை ஏற்படுத்தினர். இந்த குழுவினர் உயிரிழந்த மாலதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
குழுவின் மாநிலத் தலைவர் ராஜாராஜன் தலைமை வகித்தார். சுப்பிரமணி, ஜெயகோபி, திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாலதியின் குடும்பத்துக்கு காக்கும் காவலர்கள் குழு சார்பில் 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
காக்கும் காவலர்கள் குழு சார்பில் பணியின் போது உயிரிழந்த 19 காவலர்கள் குடும்பத்தாருக்கு இதுவரை 1 கோடியே 73 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago