சேலம் மாவட்டத்தில் நாளை - 1,392 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் :

சேலம் மாவட்டத்தில் நாளை (18-ம் தேதி) 1,392 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 17 லட்சத்து 75 ஆயிரத்து 418 பேருக்கு முதல் தவணையும், 6 லட்சத்து 50 ஆயிரத்து 513 பேருக்கு 2-வது தவணையும் போடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 5 சிறப்பு முகாம்கள் மூலம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 22 ஆயிரத்து 876 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். எனவே, நாளை (18-ம் தேதி) தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, கோவிஷீல்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 80 டோஸ்களும், கோவேக்சின் 14 ஆயிரத்து 360 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நாளை 1,392 மையங்களில் தடுப்பூசி போடப்படும். இதில், 18 ஆயிரத்து 525 பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தொடர் தடுப்பூசி முகாம்கள் காரணமாக சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வரும் பொழுது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஒன்றை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்