சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலப் பணி தீவிரம் :

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதனுடன் இணைந்த ரவுண்டானா கட்டுமானப் பணி வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் வகையில் நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடகியது. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சாலை தொடங்கி மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாக சாலை சந்திப்பு வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

தொங்கும் பூங்கா தொடங்கி, ரயில் பாதை மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் வரை இணைப்பு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, நவீன கான்கிரீட் கலவை இயந்திரத்தைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்போது, மேம்பாலத்தில் சென்று வரும் வாகனங்களால், தொங்கும் பூங்கா சாலை சந்திப்பில் போக்குவரத்து குளறுபடி ஏற்படாமல் தடுக்க, அங்கு மாற்றத்துடன் கூடிய ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, சோதனை ரீதியில் மாதிரி ரவுண்டானா ஒன்று அமைக்கப்பட்டு, அதில் போக்குவரத்து சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேம்பால கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேம்பாலம் கட்டுமானம் பயன்பாட்டுக்கு வரும்போது, போக்குவரத்து குளறுபடி ஏற்படாமல் தடுக்க, மாற்றியமைக்கப்பட்ட ரவுண்டானா அமைக்க சுமார் ரூ.25 லட்சத்தில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கட்டுமானப் பணியில் கூடுதல் செலவினங்களை சமாளிக்கவும் அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்