பண்டிகை காலங்களில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் : சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

‘எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்,’ என சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா தொற்று வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி கோயில்களில் வழிபாடு நடத்தவேண்டும். அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். மேலும், காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெறவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருந்து, கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்