திருச்சி மாநகரில் வழக்கத்தைவிட நேற்று கூடுதலாக 80 டன் குப்பை குவிந்தது.
திருச்சி மாநகரில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ரங்கம் ஆகிய 4 கோட்டங்கள் உள்ளன. இந்த 4 கோட்டங்களிலும் சுமார் 2.38 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன.
திருச்சி மாநகரில் தினமும் 400 டன் முதல் 450 டன் வரை குப்பை வரப்பெறும். பண்டிகை நாட்களில் கூடுதலாக குப்பை குவியும். அந்தவகையில், ஆயுத பூஜையையொட்டி வழக்கத்தைவிட நேற்று கூடுதலாக குப்பை குவிந்தது.
ஆயுத பூஜை நாளில் துப்புரவுப் பணியாளர்கள் விடுமுறையில் இருந்ததால், மாநகரில் குவிந்துள்ள குப்பையை அகற்றும் பணியில் நிரந்தர மற்றும் சுய உதவிக் குழு துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 3,000 பேர் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் கூறியது: ஆயுத பூஜையையொட்டி பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, தேவையில்லாத மற்றும் சேதமடைந்த பொருட்கள் அப்புறப்படுத்துவார்கள்.
மேலும், மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் விற்பனை ஆகாத வாழைக்கன்று, பூசணிக்காய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வியாபாரிகள் சாலையோரங்களில் விட்டுச் சென்றுவிட்டனர். இதனால், திருச்சி மாநகரில் வழக்கத்தைவிட கூடுதலாக சுமார் 80 டன் குப்பை சேர்ந்துள்ளது. இந்தக் குப்பையை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. வாழைக்கன்று, பூசணி உள்ளிட்ட பசுமைக் கழிவுகள் அரியமங்கலம் குப்பைக் கிடங்குக்கும், எஞ்சிய குப்பை அந்தந்த நுண் உரம் செயலாக்க மையங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago