மேட்டூர் அனல் மின்நிலையத்தில் - இயந்திரம் பழுதால் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு : தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இயந்திரம் பழுது காரணமாக 810 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மின் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி அலகு மற்றும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிலையில், 600 மெகாவாட் அலகில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, நேற்று முன்தினம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதேபோல, 210 மெகா வாட் உற்பத்தித் திறனுடைய 3-வது அலகில் நேற்று பழுது ஏற்பட்டதால், அங்கும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. இதனால், தினசரி மின் உற்பத்தியில் 810 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 210 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடைய 1, 2 மற்றும் 4-வது அலகு ஆகியவற்றில் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால், நீர் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடிக்கும் கூடுதலாக நீர் வெளியேற்றப்படும்போது, அதனைப் பயன்படுத்தி அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம், கதவணைகள் மூலம் 510 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், நீர் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும், மின்வெட்டு அபாயம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, “வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெய்து வரும் மழையால் விவசாயத்துக்கான மின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. குளிர் காரணமாக வீடுகள், அலுவலகங்களில் மின் பயன்பாடும் குறைந்துள்ளது. நாளை (இன்று) ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு மின் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தாலும், மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்