கடலூரில் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி :

By செய்திப்பிரிவு

ஆயுத பூஜை விற்பனைக்கு நடுவில் கடலூரில் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி அடைந்தது.

ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று கடலூர் உழவர் சந்தையில் அதிகாலை முதல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் குவிந்தன. அதிக அளவில் வாழைதார்கள் குவிந்ததால் ரூ.150 முதல் ரூ. 200 வரைவிற்பனை செய்யப்பட்ட வாழைத்தார்கள் ரூ. 30 முதல் ரூ. 50 வரைவிற்பனையானது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "கடலூர் அருகே உள்ள வழிசோதனைப்பாளையம், எம்.புதூர், வெள்ளக்கரை உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாழைத்தார்கள் முழுவதும் கடலூர், சென்னை. விழுப்புரம். திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதில்அதிகளவில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும். ஆந்திராவிலிருந்து மிக குறைந்த விலையில் அதிக வாழைத்தார்கள் சென்னைக்கு வந்துள்ளன. இதனால் கடலூரில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்குவதற்கு முன்வரவில்லை. இதனால் கடந்த சில தினங்களாகவே கடலூர் பகுதியில் வாழைத்தார்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

ஆனால் கடலூரில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட சாமந்தி பூ ரூ. 200-க்கும், ரூ. 120-க்கு விற்கப்பட்ட ரோஸ் ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்ட அரும்பு ரூ.800-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட குண்டுமல்லி ரூ. 800க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.400-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட கேந்தி பூ ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்மங்கி ரூ. 320-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை பூ ரூ.50-க்கும் விற்பனை செய்யப் பட்டது.

மேலும் கடலூர் உழவர் சந்தை, திருப்பாதிரிபுலியூர், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தமாக சுமார் 15 டன்னுக்கு மேலான பூசணிக்காய்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்