மதுரை மாவட்ட ஊராட்சி வார்டில் திமுக வெற்றி - திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் 18 ஆயிரம் வாக்குகளை இழந்த அதிமுக :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியது. இரண்டு ஆண்டுக்குள் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட இந்த வார்டில் 18,135 வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. அதேநேரத்தில் கூடுதல் வாக்குகள் பெற்ற திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அய்யப்பன் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரைத் தோற்கடித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அய்யப்பன் வென்றார். இதையடுத்து 16-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது.

திமுக சார்பில் வீ.ஜெயராஜ், அதிமுக சார்பில் ஐ.தமிழழகன் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெயராஜ் 9,635 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வென்றார். வேட்பாளர்கள் தேமுதிக டி.பாண்டி 548, மக்கள் நீதி மய்யம் என்.முத்துவடிவேல் 207, நாம் தமிழர் கட்சி ஜெ.ராமுதேவன் 948, அமமுக பி.வினோத் 919 வாக்குகளையும் பெற்றனர்.

அதிமுக வேட்பாளருக்கு 24.51% வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு 42.37% வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த வெற்றி மூலம் அதிமுகவுக்கு மாவட்ட ஊராட்சியில் ஆதரவு 8 கவுன்சிலராக குறைந்தது. திமுகவுக்கு 14 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிகம் பெற்ற 8,500 வாக்குகளை இழந்ததுடன், தற்போது 9,635 வாக்குகள் பின்தங்கியுள்ளது. இதன் மூலம் 18,135 வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட இந்த வார்டில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றது. தற்போது திமுக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியது: இந்த வெற்றியை திமுக கவுரவ பிரச்சினையாக கருதியது. புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் தலைமையில் அக்கட்சியினர் திட்டமிட்டு பணியாற்றி இந்த வெற்றியைப் பெற்றனர். ஆளுங்கட்சி அதிகார பலத்துடன், பிரச்சார பலமும் சேர்ந்ததால் அவர்களின் வெற்றி எளிதானது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுகவினரை ஒருங்கிணைத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டதால் அவர்களின் தேர்தல் பணியை முழுமையாக திமுகவால் தடுக்க முடியவில்லை. எனினும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயகுமாரின் வெற் றியைத் தடுக்க முடியாத திமுகவினர், இந்த வெற்றி மூலம் தற்போது ஆறுதல் தேடிக்கொண்டனர், என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்