மதுரை மாநகராட்சிக்கு ரூ.379 கோடி வரி பாக்கி : வசூல் செய்ய களமிறங்கிய சிறப்புக் குழு

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி உட்பட ரூ.379 கோடி இது வரை வசூல் ஆகாமல் உள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கிறது. அதிகபட்சமாக சொத்து வரி மட்டும் ரூ.97.03 கோடி கிடைக்கும்.

இதில் ரூ.379 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரம் வரி பாக்கி உள்ளது. அதுமட்டுமில்லாது, இந்த நிதியாண்டில் முதல் 6 மாதத்துக்கு ரூ.22.49 கோடி செலுத்தாமல் வரி பாக்கி நிலுவை வைத்துள்ளனர்.

அதனால், மாநகராட்சி மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

வரி வசூலை சீர் செய்ய சிறப்பு ஆலோசகர்கள் குழுவை மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.

இந்த சிறப்புக் குழுவில், மாநகராட்சி துணை ஆணையர் தலைவராகவும், மண்டல உதவி ஆணையர்கள் 4 பேர், மாநகராட்சி மைய கணினி நிரல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆலோசனை கூற ஓய்வுபெற்ற மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் சிறப்பு கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வரி இனங்களிலும் உள்ள நீண்ட கால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகாண இக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், நிலுவையில் உள்ள வரி இனங்களை முழுமையாக ஆராய்ந்து சீர்செய்து வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இதற்காக பில் கலெக்டர் களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்