ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேஷனல் புக் டிரஸ்ட்-இந்தியா, பள்ளிக் கல்வித் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ஆகியவை இணைந்து அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு 35-வது தேசிய புத்தகக் காட்சியை நடத்துகின்றன.
அக்டோபர் 13 முதல் 23-ம் தேதி வரை பத்து நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடக்கும் புத்தகக் காட்சியை ராமநாதபுரம் ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சி கணேசன் தொடங்கி வைத்து பேசிய தாவது: சாமானிய குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால் சாதனை யாளராக உயர்ந்தவர் அப்துல்கலாம். தன்னம்பிக்கை, முயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவரது புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விளக்குகளாக உள்ளன என்றார்.
காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பேசும்போது, மாணவர்கள் பிறப்பால் ஏற்பட்ட அடையாளத்தை விட சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முதல் நூல் விற்பனையைத் தொடங்கிவைத்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார் பேசும்போது, புத்தகங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதை படித்தால் உணரலாம். அப்துல்கலாமின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள் படித்து அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஞானலெட் சா.சொர்ணகுமாரி, ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா, முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சு.கணேசபாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் ந.சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago