ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல்இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இதன்படி, ஒரு நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ 100 வீதம் அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, நேற்று காலை முதல் ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், அரசு மருத்துவமனை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தணிக்கை நடந்தது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலையிலும் வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கை தொடர்ந்தது.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல், கோபி, அம்மாபேட்டை, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக, மாவட்டம் முழுவதும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம்செலுத்திய பின்னர் மாலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago