திருச்சி மாநகரில் சரித்திர பதிவேட்டில் உள்ள ரவுடிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும் எனவும், ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீஸாருக்கு காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர்கள் சக்திவேல் (சட்டம், ஒழுங்கு), முத்தரசு (குற்றம், போக்குவரத்து) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் பேசியதாவது:
முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு செய்து, விசாரணையை முடித்து விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, ரவுடிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். வழக்கில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் பழிவாங்கும் கொலை சம்பவங்கள் நடைபெறாத வகையில் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகளில் தொடர்புடைய எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றி பட்டியல் தயாரித்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சரித்திர பதிவேட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் காவல் அலுவலர்கள் தினமும் தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனை பிணையில் வந்தவர்கள் நிலையத்தில் முறையாக கையெழுத்திடுகின்றனரா என தணிக்கை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளிலிருந்து விடுதலையான நபர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
சரித்திர பதிவேட்டில் உள்ள ரவுடிகளின் சொத்து விவரங்களை சேகரித்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாநகரில் ரவுடிகளால் ஏற்படும் குற்ற சம்பவங்களை முற்றிலுமாகத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாநகரில் பணிபுரியும் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago