ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் - வெளி மாநில தொழிலாளர்களுக்கு பொருட்கள் : தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தகவல்

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலில் இருக்கிறது. குடும்ப அட்டை வைத்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் நம் மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு ரேஷன் கடையில் இருந்து உணவுப் பொருட்களை பெறலாம்.

இந்த திட்டத்தின் பயனாளி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையை பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையை இங்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. பயனாளியின் ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை பதிவுகள் சரிபார்த்த பிறகு எந்த ரேஷன் கடையில் இருந்தும் அரிசி அல்லது கோதுமையை பெற்றுக்கொள்ளலாம்.

அரிசி கிலோ ரூ.3 மற்றும் கோதுமை கிலோ ரூ.2 விலையை கொடுத்து பெற வேண்டும். பயனாளியின் குடும்பத்தின் மொத்த உரிம அளவுக்கு மிகாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும் வேறு மாநிலத்தில் மற்றொரு பகுதியையும் பெற்றுக்கொள்ள முடியும். ஒரே தவணையில் மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இதில், அரிசி மற்றும் கோதுமை தவிர கூட்டுறவு அங்காடி விற்பனை செய்யும் இதர வெளி மார்க்கெட் பொருட்களை உரிய விலையில் பெற முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE