தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு பவானிசாகரிலிருந்து 15-ம் தேதி நீர் திறப்பு :

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 6,543 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன 2-ம் போகத்திற்கு வரும் 15-ம் தேதி முதல் நீர் திறக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன முதல்போகத்திற்கு நீர் திறக்கப்பட்டு, தற்போது அறுவடைப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு வரும் 15-ம் தேதியில் இருந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி வரையில் 120 நாட்களுக்கு 9849.60 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், கோபி, அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

பவானிசாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் விதிமுறைகளின்படி 102 அடிக்கு மேல் நீரினைத் தேக்கி வைக்க முடியாது என்பதால், உபரி நீர் தொடர்ந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பில்லூர் அணை நிரம்பியதால், அங்கிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6543 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் உபரியாக 4200 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்