விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் - பெரும்பான்மை இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் திமுகவினர் முன்னிலையில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளிட்ட ஊரக பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் 84.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதில், 28 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், 293 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 688 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 5,088 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 6,097 பதவிகளுக்கு 24,193 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து 22 ஊராட்சி மன்றத் தலைவர்களும், 357 கிராம வார்டு உறுப்பினர்களும் என மொத்தம் 369 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். 3 இடங்களில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மீதமுள்ள இடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 177 பேர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,369 பேர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு 2,702 பேர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15,734 பேர் என மொத்தம் 19,982 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக 13 மையங்களில் வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிகைக்காக, ‘ஸ்டாங் ரூம்’ திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டன. இந்த பெட்டிகளை ஒரு இடத்தில் வைத்து பிரித்து, தனித் தனி பதவிகளுக்கு வாக்கு எண்ணும் மேசைகளுக்கு வாக்குச் சீட்டுகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வேட்பாளர்கள முன்னிலையில் வாக்குகள் எண்ணும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும்வருவாய்த்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இவ்வாறு செலுத்தப்பட்ட தபால்வாக்குகளைப் பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணியில் 5,605 பேர் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி அட்டை வைத்துள்ள முகவர்கள், வேட்பாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர் . மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நாதா தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் மோகன், தேர்தல் பார்வையாளர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

28 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர்களில் 20 இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 49, ஊராட்சி மன்ற தலைவர்கள் 165, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 883 என 1097 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்