நாடு முழுவதும் 5 ஆயிரம் பயோ காஸ் ஆலைகள் அமைக்கப்படும் : ஐஓசி தென் மண்டல செயல் இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்குள் 5,000 பயோ காஸ் ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது, என இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) தென் மண்டல செயல் இயக்குநர் தெரிவித்தார்.

நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள இந்தியன் ஆயில் கம்ப்ரெஸ்ட் பயோ காஸ் உற்பத்தி ஆலையை இந்தியன் ஆயில் தென் மண்டல செயல் இயக்குநர் கே.சைலேந்திரா பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் முதல் முறையாக ஐஓசி சார்பில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கம்ப்ரெஸ்ட் பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 15 டன் உற்பத்தி செய்ய முடியும். தற்போது நாள் ஒன்றுக்கு 5 டன் பயோ காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் 5 ஐஓசி பெட்ரோல் பங்குகளில் பயோ கேஸ் இண்டிகிரீன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. கம்ப்ரெஸ்ட் பயோ காஸ் என்பது சிஎன்ஜி காஸ்க்கு இணையானது, சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயோ காஸ் உபயோகப்படுத்தலாம்.

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்குள் 5,000 பயோ காஸ் ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 13 பயோ காஸ் ஆலைகள் உள்ளன.

வாகனங்களுக்கு பயோகாஸ் மலிவான எரிபொருளாகும். ஒரு கிலோ ரூ.65-க்கு கிடைக்கிறது.ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு இணையானதாகும். எதிர்காலத்தில் பேட்டரி மூலம் இயங்கக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஐஓசி நிறுவனம் தரமான பேட்டரிகள் தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. வருங்காலத்தில் ஐஓசி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல், பயோ காஸ், பேட்டரிகள் மற்றும் பேட்டரி சார்ஜிங் வசதி போன்ற அனைத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியன் ஆயில் முதன்மை பொதுமேலாளர் ஆர்.சிதம்பரம், சேலம் மண்டல தலைமை மேலாளர் ஜெ.சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்