சேலம், ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் பதவி, மாவட்டப் பஞ்சாயத்து 10-வது வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 24 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த 9-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 79 சதவீதம் வாக்கு பதிவானது. வாக்கு எண்ணிக்கை நேற்று 12 மையங்களில் நடந்தது. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்முகம், அதிமுக வேட்பாளர் முருகனை விட 10,472 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் 2,993 வாக்குகள் பெற்று,வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் தேவி குமார் 1,222 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 320 வாக்குகளும் பெற்றனர்.
கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு புத்தூர் அக்ரஹாரம்- சிவானந்தம், சிக்கனம்பட்டி- ரங்கநாதன், சேலத்தாம்பட்டி- கண்மணி, கோவிந்தம்பாளையம்- விஜயா, புளியம்பட்டி- கோவிந்தசாமி, அதிகாரிப்பட்டி- சத்யா, வீராணம்- செல்வராணி, வெள்ளார்- சுகந்தி பழனிசாமி, தாதாபுரம்- வளர்மதி, கரிக்காப்பட்டி- விஜயா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருந்த 20 ஊரக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு 65 பேர் போட்டியிட்டனர். 9-ம் தேதி நடந்த தேர்தலில் 70. 22 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
பவானி, டி.என்.பாளையம், அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட 9 மையங்களில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 5-ல், திமுக வேட்பாளர் ஜெ.சதாசிவமும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 4-வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கே.வி.விவேகானந்தனும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10-ல், ரா.செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர்.
இதில், பெருந்துறை ஒன்றிய 10-வது வார்டில் உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயக்குமார், சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். தற்போது, அந்த இடத்தை திமுக கைப்பற்றியுள்ளது.
நாமக்கல்லில் திமுக வெற்றி
நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 4,973 வாக்குகள் பதிவானது. 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துக்கருப்பன் 3,135 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் விஜய் 1,696 வாக்குகள் பெற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago