வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். வேளாண் விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகள், வீணாகாமல் தடுக்கும் வகையில் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளை காரில் மோதிக் கொன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து, சங்கத்தின் மாநில அலுவலகமான தனது வீட்டு வளாகத்திலேயே அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
பின்னர், போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியது: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆனால், எங்களை மட்டும் டெல்லிக்குச் செல்ல போலீஸார் அனுமதி அளிப்பதில்லை. எனவே, நவ.26-ம் தேதி வரை 46 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago