கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது எந்தவிதமான வரி உயர்வும் இருக்காது என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் வி.வி.ஜி.நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முகாமை தொடங்கிவைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துச்செல்வம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானக்கண்பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, கரூர் நகராட்சி பல்நோக்கு மையத்தில் வங்கிகள் சார்பில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வி.செந்தில்பாலாஜி 1,093 பேருக்கு ரூ.58.24 கோடியில் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது:
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, தற்போது நகராட்சியாக உள்ள பகுதிகளிலும், மாநகராட்சியுடன் சேர்க்கப்படும் ஊராட்சிகளிலும் எந்தவிதமான வரி உயர்வும் இருக்காது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஜார்ஜ்பாபுலாசர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.ராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கரூர் நகராட்சியில் ஒரு நாள் ஒரு வார்டு திட்டத்தில் 31-வது வார்டு பசுபதிபாளையம் அருணாசலம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago