நெல்லையில் தசரா விழாவில் அம்பாள் சப்பர ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், அது தொடர்பான மனுவை அக். 14-க்குள் மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த லெட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை டவுன் காமாட்சியம்மன் கோயில், மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவில் அம்பாள் சப்பரம் கோயிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோயில் நான்கு ரத வீதி வழியாகச் சென்று கோயிலுக்கு திரும்ப வந்து சேரும்.
இந்தாண்டு தசரா விழா அக். 6-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலை காரணம் காட்டி அம்பாள் சப்பர ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக். 15 அன்று இரவில் அம்பாள் சப்பர ஊர்வலம் நடைபெறும்.
எனவே கரோனா வழிமுறைகளை பின்பற்றி அக். 15-ல் மாரியம்மன் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு பகுதியில் சாலியர் தெருவிலிருந்து தொண்டர் சன்னதி திருக்கோயில் வரை வீதி உலா செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி தமிழ்செல்வி விசாரித்து, மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட ஆட்சியர் அக். 14-க்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago