திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் - 11 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(அக்.12) 11 இடங்களில் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 14 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு அக்.9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

அதைத்தொடர்ந்து, அந்தநல்லூர், திருவெறும்பூர், மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட எஸ்.பிபா.மூர்த்தி கூறும்போது, ‘‘உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 3 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள் உட்பட 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துறையூர், மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அதிரடிப்படை காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு அருகில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அளவுக்கு அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபடலாம் என சந்தேகப்படக்கூடிய நபர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்