40 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி மையம் : ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்காக 40 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் இன்று 5-வது கட்டமாக தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 900 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் மொத்தம் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் நாளை 64 மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நடமாடும் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெறும் 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்காக நடமாடும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆட்டோக்கள் நடமாடும் தடுப்பூசி மையத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு ஆட்டோவிலும் தடுப்பூசி செலுத்த ஒரு செவிலியரும், ஒரு டேட்டா எண்ட்ரி செய்பவர்களும் இருப்பர்.

இவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று அந்தப் பகுதியில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்களை சேகரித்து அவர்கள் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பர். இது வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்