சேலம் மாவட்டத்தில் காலியாகவுள்ள 24 பதவிகளுக்கான - ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 79% வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி, 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவி மற்றும் 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 24 பதவிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 195 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதற்றமான 58 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் 29 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடியோ மூலம் வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 785 பேர் ஈடுபட்டனர்.

நேற்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 6 பறக்கும் படை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணிக்கு 35 சதவீதமும், மதியம் 3 மணிக்கு 66 சதவீதமும், மாலை 6 மணிக்கு 79 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சேலம் மாநகர பகுதியில் மாநக காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா தலைமையில் 361 போலீஸாரும், மாவட்ட பகுதியில் எஸ்பி  அபிநவ் தலைமையில் 650 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் அசம்பாவிதமின்றி வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது.

வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 12 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்