கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் - சிறு சிறு பிரச்சினைகளோடு2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று சிறு சிறு பிரச்சினைகளோடு நடந்து முடிந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 950 வாக்குச்சாவடிகளில் நேற்று நடைபெற்றது. இதில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 49 வேட்பாளர்களும், 88 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 337 வேட்பாளர்களும், 180 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 605 வேட்பாளர்களும், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,019 வேட்பாளர்களும், ஆக மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களம் கண்டனர். 198 மண்டல அலுவலர்களும் 6,393 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பதற்றமான 52 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா முலம் கண்காணிக்கப்பட்டது. 49 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவும் மற்றும் 50 வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டதன் காரணமாக எந்த வாக்குச்சாவடியிலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

இதனிடையே நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியதும் தியாகதுருகம் ஒன்றியத்துக்குட்பட்ட பானையங்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் அங்கம்மாள் என்பவரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடிசி எனும் முத்திரை குத்தப்பட்டு ( தேர்தல் பணியாளர் அடையாளம்) இருந்தது. அவர் ஏற்கெனவே தபால் மூலம் வாக்களித்தவர் என வாக்குச்சாவடி அலுவலர் கூறினார். இதற்கு வேட்பாளர் அங்கம்மாள் எதிர்ப்புத் தெரிவித்தார். தான் அரசு ஊழியர் அல்ல. தனக்கு தபால் வாக்கு எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விசாரித்தபோது, பாகம் எண் மாற்றி வாசிக்கப்பட்டதால், பெயர் மாறியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் பெண் வேட்பாளரை வாக்களிக்க அனுமதித்தனர்.

இதைபோன்று கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட எலியாத்தூர் வாக்குச்சாவடியில் பெண் ஒருவர் 2-ம் முறையாக வாக்களிக்க வந்ததாக வேட்பாளர்கள் முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் வாக்குச்சாவடி அலுவலர் தலையிட்டு சமரசம் செய்து அப்பெண்ணை வாக்களிக்கச் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி முதற்கட்ட வாக்குப்பதிவில் 82.1 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், நேற்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு 82.6 சதவீதம் பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்