விழுப்புரம் மாவட்டத்தில் மழையிலும் ஆர்வமாக வாக்களிப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளகோலியனூர், காணை, மரக்காணம், வல்லம், மேல்மலையனூர், மயிலம் ஒன்றியங்களில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆங்காங்கே மழை பெய்தாலும் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர் திருவாதி கிராமத்தில் விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி, மயிலம் ஒன்றியம் அவ்வையார் குப்பம் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் வாக்களித்தனர்.

காணை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாக்கூர் கிராமத்தில் வேட்பாளர் ஒருவரின் கணவர் பூத் ஏஜெண்டாக இருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

கண்டமங்கலம் ஒன்றியத்தில் 250-க்கும் மேற்பட்ட அங்கன் வாடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட இவர்களுக்கு தபால் வாக்களிக்க படிவம் வழங்கவில்லை. இதையடுத்து கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேண்டுமென்றே தங்களுக்கு தபால் வாக்குகள் மறுக்கப்படுவதாக அங்கன் வாடி ஊழியர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தின் நடுவே ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. சில இடங்களில் சின்ன சின்ன வாக்குவாதங்கள், பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் அமைதி ஏற்பட்டது. இரண்டாம் கட்ட தேர்தலில் நேற்று மாலை நிலவரப்படி 83.59 சதவீத வாக்குப் பதிவானதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்