சங்கராபுரம் அருகே வாக்குச் சாவடியில் இருந்து வாக்குச் சீட்டுகளை தூக்கிச் சென்று குறிப்பிட்ட சின்னத்துக்கு முத்திரைக் குத்தி வாக்களித்தவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அதன்படி சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பூட்டை 10-வது வாக்குச் சாவடியில்நேற்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வாக்களிக்க வந்த குணசீலன்(45) என்பவர், வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்குச்சாவடி அலுவலரின் உதவியோடு அங்கிருந்த 44 வாக்குச் சீட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டு, அதிலிருந்த சீப்பு சின்னத்திற்கு முத்திரையைக் குத்தி, அதன் பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு அந்த வாக்குச் சீட்டுகளை வாக்குப் பெட்டியில் செலுத்தியுள்ளார். இதையறிந்த வாக்குச் சாவடி முகவர்கள், அதுகுறித்து வாக்குச் சாவடி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலரின் புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸார் குணசீலன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இதையடுத்து பூட்டை வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூடுதல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago