கர்நாடகாவில் வசிக்கும் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தம்பதி எழுமலை-ஜோதி. இவர்களது 11 வயது மகள் ப்ரீத்தி நடக்க முடியாததால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு தனி மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், கலப்பு இணைப்பு திசு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் அறிவுரையின்படி சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் மேற்பார்வையில் 6 முறை ரத்த சுத்திகரிப்பு செய்து சிகிச்சை வழங்கினர். இதன் பலனாக உடல்நிலை முன்னேறி 23 நாட்கள் கழித்து தானாக நடக்க ஆரம்பித்தார்.
தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சை அளிக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமி ப்ரீத்தி சிகிச்சையில் இருந்தபோது அவரின் தந்தை எழுமலை திடீரென்று இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்குக்காக இக்குழந்தையின் தாய் உட்பட அனைவரும் சென்றுவிட ஐஆர்சியூ பிரிவின் செவிலியர்கள் இவரது தந்தை இறந்ததை தெரிவிக்காமல் கனிவுடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொண்டனர். ப்ரீத்தியின் உயிரைக் காப்பாற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவுத்துறை தலைவர் பாலசங்கர், பேராசிரியர் நந்தினி குப்புசாமி, சிவக்குமார், நரம்பியல்துறை மருத்துவர் மணிவண்ணன், சிறுநீரகத்துறை மருத்துவர் அருள், முடக்குவாத துறை மருத்துவர் அருள் ராஜமுருகன், மயக்கவியல் துறை மருத்துவர்கள் செல்வ குமார், பிரதீபா, தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் கீதாராணி ஆகியோரை மருத்துவமனை டீன் ஏ.ரத்தின வேலு பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago